search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை சந்தை"

    • மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
    • சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும்.

    இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதுதவிர கோழி, மீன், கருவாடு, மாடு உள்ளிட்டவையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வியாபாரிகளின் கூட்டமும், ஆடுகள் வாங்க வருபவர்களின் கூட்டமும் அலைமோதி காணப்படும். வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவை சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சிறிய குட்டிகளை விட பெரிய ஆடுகளை அதிக ஆர்வத்துடன் கறிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றனர்.

    தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், தொடர்ந்து அவர்கள் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

    சிறிய குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. செம்பி கிடா ஒன்று ரூ.35 ஆயிரத்துக்கும், சண்டகிடா ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இதுதவிர செங்கிடா, கன்னி கிடா உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர் மழையின் காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தீபாவளியையொட்டி சந்தையில் அமோக விற்பனை நடப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான வியாபரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    • பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
    • கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

    உடுமலை :

    மடத்துக்குளம் அருகே கடத்தூர் கிராமத்தில் சித்திரமேழி கல்வெட்டு உள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கடத்தூரில் உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டானது வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்வெட்டாகும்.சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.

    இந்த கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு என அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.

    கடத்தூர் மருதீசர் கோவிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் கொழுமம் கோவில்களிலும், நிலக்கொடை சார்ந்த கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.ஆனால் இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக உள்ளது. இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்துள்ளது. அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால் தான் இந்த கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இடத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்தால் வரலாறு தெரிய வரும் என்றனர்.

    • விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
    • ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கால்நடை சந்தை நடைபெறும். இந்த கால்நடை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும் கால்நடை சந்தை மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ. 79 ஆயிரத்து 700 க்கு ஏலம் விடப்பட்டது.

    • நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் நாட்டு மாடுகள் பங்கேற்கும் கால்நடை சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம்.
    • நோய் தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது, சந்தையில் மாடுகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    ஓசூர், ஜன,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான சப்பளம்மா தேவி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் தை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது, நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில் நாட்டு மாடுகள் பங்கேற்கும் கால்நடை சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம்.

    நிகழாண்டில், தை திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கால்நடை சந்தையும் தொடங்கியது. இச்சந்தைக்கு வழக்கம்போல கர்நாடக, ஆந்திர மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் பங்கேற்று கால்நடைகளை வாங்கிச் செல்வார்கள் எனவும், ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

    மேலும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஆனால், கால்நடைகளுக்குப் பரவும் அம்மை நோய் காரணமாகச் சந்தைக்கு வழக்கத்தை விட கால்நடைகள் வருகை குறைந்தன. மேலும், விற்பனையும் சரிவைச் சந்தித்தது.

    இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    மூன்று மாநில மக்கள் கூடும் கால்நடை திருவிழா 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு நடைபெறும் சந்தையில் நல்ல தரமான நாட்டு மாடுகள் கிடைக்கும். மாடுகளை வாங்கவும், விற்கவும் அதிகளவில் விவசாயிகள், வியாபாரிகள் வருவது வழக்கம்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும். கரோனாவால் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த சந்தையில் போதிய அளவு மாடுகள் விற்பனையாகவில்லை. நிகழாண்டில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகச் சந்தையில் கால்நடைகள் வர்த்தகம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது, சந்தையில் மாடுகள் வாங்க வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளது.

    மேலும், நாட்டு மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருவதால், சந்தைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×